இன்று உலக புத்தக தினம். ஆங்கிலத் துணைப்பாடத்தில் கண்டுகொள்ளாமல் கடந்த ஒரு சிறந்த எழுத்தாளரை இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
#ஆன்டன்_பாவ்லோவிச்_செக்காவ்.
ரஷ்ய எழுத்தாளரான இவர் தன்னுடைய தாயிடம் கதைகள் கேட்டு வளர்ந்தவர். மேல்தட்டு மக்களை நாடகங்களாக பார்த்துக்கொண்டிருந்தபோது,
சாமானியர்களைப்பற்றி எழுதியவர். நூறாண்டுகள் கடந்தும் இன்றும் அவர் எழுத்துக்கள் புத்தம் புதிதாய் இருப்பதற்கான காரணம் அவர் உண்மையை எழுதியதே. ஒரு சில கதைகள் பற்றி மட்டும் சொல்கிறேன்
1. #பச்சோந்தி கதையில் ஒரு போலீஸ்காரர், ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு நாய்க்குமிடையே என்ன நியாயம் செய்கிறார். அது தெரு நாயாக இருக்கும் பட்சத்தில், சாமானியன் பக்கம் நிற்பார், அதுவே உயரதிகாரி வீட்டு நாயாக இருந்தால்?? நிறமாற்றத்தை படம்பிடிக்கும் மிக அழகான கதை.
2. #ஒரு எழுத்தரின் மரணம் என்ற இன்னொரு கதை. திடீரெனெ வரக்கூடியதுதானே தும்மல். யாரால் அடக்க முடியும். முத்து படத்தில் ரஜினிகாந்த் க்கு ஒரு வசனம் வரும். அதுபோல எந்த இடம், யார் முன்னாள் என்றெல்லாம் பார்க்க முடியுமா தும்மல் வந்தால்.
ஒரு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அப்படி தும்மிவிட்ட ஒரு சாதாரண எழுத்தர் (க்ளெர்க்) தனக்கு முன்னாள் வரிசையில் இருந்த உயரதிகாரிமேல் பட்டிருக்கோமோ என்று தனக்குள்ளாக பயந்து, அந்த அதிகாரியிடம் அடுத்தடுத்து மன்னிப்பு கேட்கிறார். இரண்டாம் நாள் அதிகாரிக்கே எரிச்சலாகிறது.
அவர் கோபத்துடன் கண்டித்ததும் மனம் இற்று வீடு வந்த எழுத்தர், நாற்காலியில் படுத்தவாறே மரணிக்கிறார்.
செர்வியாக் என்னும் புழுவைக் குறிக்கும் ருஷ்யச் சொல்லிலிருந்து பெயர் கொடுத்திருக்கிறர் ஆன்டன் செக்காவ். பெயரிலேயே எலும்பில்லாத, தனக்கான உரிமைகளை அறியாத, அற்ப மனிதர்களின் குறியீடு.
3. #பந்தயம் இன்னொரு அற்புதமான கதை #எஸ்ராவின் பக்கத்திலிருந்து சுட்டியாகத் தருகிறேன். பந்தயத்தில் உண்மையில் யார் வென்றது??

எனக்குப் பிடித்த கதைகள் 5 - https://www.sramakrishnan.com/ எனக்குப்-பிடித்த-கதைகள்-5/
4. அடுத்து #வான்கா என்ற கதை. ஒன்பது வயது சிறுவன் வான்கா கிறிஸ்துமஸ் காலத்தில் தன்னுடைய எஜமானரிடமிருந்து தன்னை அழைத்துபோகச்சொல்லி தாத்தாவுக்கு கடிதம் எழுதுகிறான்.அதில்
"நேற்று என்னை அடித்து நொறுக்கிவிட்டார்கள் . முடியைப் பிடித்து எசமான், என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச்சென்று கடிவாள வாரால் நையப்புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில், தவறிப் போய் நான் தூங்கிவிட்டேன்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் எசமானி என்னைக் கெண்டை மீனைச் சுத்தம் செய்யச் சொன்னாள் . நான் வால் பக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன் . உடனே எசமானி அந்த மீனைப் பிடுங்கி, அதன் தலையை என் முகத்திலே வைத்து தேய்த்தாள்" என்று இன்னும் தனது துன்பங்களைச்சொல்லி எப்படியாவது கிராமத்திற்கு
அழைத்துச் சென்றுவிட மன்றாடி எழுதுகிறான். அந்தக் கடிதத்தை எப்படி அனுப்புவது என்பது தெரியாமலேயே தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வந்து தன்னுடைய கிராமத்தில் இருப்பதுபோலக் கனவு காண்பதே கதை.
மருத்துவரான செக்காவ் காச நோயால் அவதிப்பட்டார். இருந்தும் சைபீரிய சிறைச்சாலை குறித்து ஆராய்ந்து எழுதினார். வாழ்வின் ஆதார கீதங்களை இசைத்தவர். நூல்கள் காலம் கடந்து நிற்பது இவ்வாறான வாழ்வின் புதைபட்ட பக்கங்களைத் தோண்டியெடுக்கும் எழுத்துக்களாலேயே.

#WorldBookDay
You can follow @Lakshmivva1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: