இன்று #கைசிகஏகாதசி. கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று பாணர் குலதிலகம் நம்பாடுவான் கைசிகப் பண் இசையில் பாடி பெரும் பேறு பெற்றதால் இந்த ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்று பெயர். கைசிகம் என்பது ஒருவகை ராகம் ஆகும். திருக்குறுங்குடி கோவிலில் வீற்றிருக்கும் நம்பிப்பெருமாள் மீது பக்தி
கொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான் என்ற பக்தனின் இறைப்பற்றைக் கூறுவது தான் கைசிக ஏகாதசி புராணம். வராக அவதாரத்தின் போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் இதை அருளியதாக வராக புராணம் கூறுகிறது. நம்பாடுவான் என்கிற தாழ்ந்த குடியில் பிறந்த ஒருவன் தினமும் காலையில் திருக்குறுங்குடி
நம்பி பெருமாள் கோவில் முன்பாக நின்று பண் அமைத்து நாராயணனை பாடிவருவான். அவருக்கு அக்காலத்தில் கோவிலின் உள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு ஏகாதசி அன்று கோவிலுக்கு செல்லும் முன்பாக ஒரு பிரும்மராட்சசன் இவனைப் பிடித்து கொண்டு விழுங்குவேன் என கூற நம்பாடுவான் நான் ஏகாதசி
விரதம் இருக்கிறேன். அழகிய நம்பியை சேவித்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன் என்று கூற அதை ராட்சசன் நம்ப மறுக்கிறான். அதற்கு நம்பாடுவான் நான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பரம பக்தன். நான் பொய் சொல்ல மாட்டேன் என்று பதினெட்டு விதமான சத்தியங்களைச் சொல்லி அனுமதிக்குமாறு
ராட்சசனிடம் மன்றாடுகிறான். ஆனால் ராட்சசன் அவனை விடுவதாக இல்லை. கடைசியாக நான் திரும்ப வரவில்லை என்றால் வாசுதேவனை விட்டு மற்ற தேவதைகளை வணங்குபவர்களுக்கு என்ன கதி கிடைக்குமோ, நாராயணனைத் தவிர மற்ற தேவதைகளோடு சமமாக நினைப்பவர்கள் பாவத்தை நான் அடையக்கடவது என்று சத்தியம் செய்ய அவனது
விஷ்ணு பக்தியைக் கண்டு ராட்சசன் அவனை அனுப்பி வைக்கிறான். ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு நம்பியைச் சேவித்துவிட்டு ராட்சசனைத் தேடி திரும்ப வரும் சமயத்தில் நம்பாடுவானைச் சோதிப்பதற்காக அழகிய நம்பி கிழவனாக அவன் முன்னே தோன்றி இந்த வழியில் ராட்சசன் இருக்கிறான் வேறு வழியில் செல் என்று
சொல்கிறார். நான் சத்தியத்திலிருந்து தவறமாட்டேன் என்று நம்பாடுவான் சொல்ல நம்பி அவன் உறுதியைக் கண்டு அவனுக்கு அருள்புரிந்து மறைகிறார். நம்பாடுவான் ராட்சசனிடம் வந்த போது அவனுக்கு அப்பொழுது பசி இல்லாமல் போய்விட்டது. நம்பாடுவானின் புண்ணிய தன்மையே அதற்குக் காரணம் என்பதை அவன் உணர்ந்தான்
ஒரு பிராமண குடியில் பிறந்து நியமம் இல்லாத, இறை நம்பிக்கை அற்று வாழ்ந்து இந்த நிலை அடைந்ததாகவும், நம்பாடுவான் நாராயணன் முன் பாடி அவன் பெற்ற பலனை அளித்தால் தான் இந்த பிரம்மராட்சன் என்கிற கொடிய நிலையில் இருப்பது மாறும் என்று நம்பாடுவானை வேண்டினான். கைசிக ராகத்தில் பாடிய பாட்டின்
பலனை நம்பாடுவான் அவனுக்குத் தர அவன் வீடு பேறு பெற்றான் என்று முடிகிறது இப்புராணக் கதை. தூய்மையான பக்தியுடன் எவனொருவன் மஹா விஷ்ணுவிடம் சரணாகதி அடைகிறானோ அவனே ஸ்ரீவைஷ்ணவன். சரணடைந்த பின் எக்குலத்தவராயினும் அவனிடம் குல வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை
சித்தாந்தம். திருப்பாணாழ்வார், நம்பாடுவான் வாழ்க்கை வரலாற்றில் இது மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பிராமண குடியில் பிறந்து அற்ப வாழ்க்கை வாழ்ந்தால் ஒரு ராட்சச பிறவி கிட்டும். தாழ் குடியில் பிறப்பினும் இறை நம்பிக்கை கொண்டால் தன்னையும் உயர்த்தி பல பிராமண குடியில் பிறந்து
ராட்சர்களானவர்கள் போன்ற கேவல ஜன்மங்கள் கடைத்தேற வழி உண்டாகும் என்பதே இந்த வைபவத்தின் சாரம். கலியுகத்தில் பக்தி செய்ய நாம சங்கீர்த்தனமே சிறந்த வழி என்று சொல்லப்படுகிறது. மீரா, துக்காராம், சூர்தாஸ், கபீர்தாஸர், ராமதாஸர், தியாகராஜர் என்று பக்தர்களின் வரிசையில் நம்பாடுவானும் ஒருவர்.
ஸ்ரீரங்கத்தில் ராமனுஜரின் அணுக்கர் கூரத்தாழ்வான் புத்திரரான பாராசர பட்டர் சுவாமிகள் இந்த புராணத்தை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் முன் வாசித்து அதை கேட்ப்போர் நற்கதி அடைய வேண்டுவார். அது இன்றும் தொடருகிறது. இந்தக் கைசிக புராண நாடகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பே சங்கரக்கம்பர், நாராயணன்,
குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனர். தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு இந்த நாடகம் அரங்கேறுதல் தடைபட்டது. ஆனால் 1997 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு கைசிக ஏகாதசி அன்றும் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளிய பின் இந்தக் கதை அவர் முன்பாக
அரங்கேறுகிறது. இரவு 9.30 க்குத் தொடங்கி தொடர்ந்து ஐந்து மணி நேரம் இந்நாடகம் அரங்கன் முன் நடத்தப்படுகிறது. திருக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோவிலிலும் நடந்து வருகிறது. ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் இரவு முழுவதுமாக அர்ஜுன மண்டபத்தில் இருந்து பராசர பட்டரின் கைசிக புராணம் படிப்பை
செவிமடுத்து கேட்பார். கைசிக புராணம் படிக்கும்போது நம்பெருமாளுக்கு 365 போர்வைகள் சாற்றப்படும். ஒவ்வொரு போர்வைக்கும் ஓரு ஆரத்தி (365 ஆரத்திகள்) காட்டப்படும். துவாதசி அன்று அதிகாலை 4.30 மணியளவில் நம்பெருமாளுக்கு கீழப்படி வழியாக கற்பூர படியேற்றம் நடைறும். அப்போது அரையர்கள் தாளம்
இசைக்க, நம்பெருமாள் அசைய, திருமுத்து குடை அதே திசையில் சுழல, சாமரமும் அசைய, திருஆலவட்டம் சுழல, சாத்தார ஶ்ரீவைஷ்ணவர்கள் பச்சை கற்பூரம் தூவ நம்பெருமாள் படியேற்றம் காணுவார். அதே போல் ஸ்ரீவைஷ்ணவர்களும் தங்களையே த்யாகம் செய்து அதாவது கைசிக ஏகாதசிக்கு முன் தான் செய்த பாபங்களை பழைய
வாசனைகளை நம்பெருமாளின் தரிசனத்தால் போக்கிக் கொண்டு, புதிய மனிதனாக மாறி அதாவது புதிய வாசனையாகிய கற்பூர நறுமணத்தை பெற்று இந்தப் பிறவியில் உய்வடைதல் பகவானாகிய ஸ்ரீமந்நாராயணனின் கைங்கர்யத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்பதை அடியார்களுக்கு நினைவூட்டும் பொருட்டு நம்பெருமாள்
கற்பூரப் படியேற்ற ஸேவை கண்டருள்கிறார்.
இதற்கு பிறகு கைசிக புராணம் வாசித்த பட்டருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியுடன் கைசிக ஏகாதசி நிறைவுபெறும். கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்போ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள்
யாவரும் இந்த உலகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.
#அர்த்தமுள்ளஇந்துமதம்
sources https://www.facebook.com/SrirangamTv/posts/2065910680099123/
https://tamil.oneindia.com/astrology/news/kaisika-ekadesi-is-celebrated-in-the-tamil-month-of-karthigai-303436.html
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF https://dhinasari.com/spiritual-section/120587-kaisika-ekadasi-special.html
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: