அந்த நாட்டு அரசர் புதுமை விரும்பி.

அந்த அரசரிடம் அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அரசர் சிரித்தபடியே, அந்தப் பொம்மைகளைப் பார்த்து நான் என்ன குழந்தையா? இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு என்று கிண்டலாகக் கேட்டார் சிற்பியிடம்.
அதற்கு சிற்பி சொன்னார், அரசே இது உங்களுக்கு இல்லை. இந்த பொம்மைகள் நம் நாளைய பட்டத்து இளவரசருக்கு உபயோகமாக இருக்கும் என்றார்.

பட்டத்து இளவரசரும் குழந்தை இல்லையே சிற்பி என்று அரசர் மீண்டும் சிற்பியை மடக்க,
இந்த பொம்மைகள் சாதாரண பொம்மைகள் அல்ல அரசே!
இவைகளில் ஒரு விஷயம் உள்ளது.
அது என்னவென்றால் இந்த நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதில் ஒரு ஓட்டை நம் கண்களுக்குத் தெரிந்து இருக்கிறது.
ஆனால் நம் கண்களுக்குத் தெரியாத பல ஓட்டைகளும் இதில் மறைந்துள்ளது. இதுதான் விஷயமே இந்த பொம்மைகளில் என்றார்.

அரசர் ஆர்வமாகி, கொஞ்சம் நன்றாக விளக்குங்களேன் என்றார் சிற்பியிடம்.
உடனே சிற்பி முதல் பொம்மையை அரசரிடம் கொடுத்து, அந்த பொம்மையுடன் ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து, அந்த பொம்மையின் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொன்னார்.

அரசர் அந்த பொம்மையின் காதில் சங்கிலியை விட அது பொம்மையின் மறுபக்க காது வழியே வந்தது.

சிற்பி அரசரைப் பார்த்து சிரித்தார்.
பின்பு சொன்னார், நாம் எதைச் சொன்னாலும் மனிதர்களில் சிலர் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுகிறார்கள் என்பதையே இந்தப் பொம்மை குறிக்கிறது.

அடுத்த பொம்மையை எடுத்து மீண்டும் சங்கிலியை முன்பு போலவே பொம்மையின் காதில் விட சொன்னார் அரசரிடம் சிற்பி.
இரண்டாவது பொம்மையில் காதின் ஓட்டை வழியாக விடப்பட்ட சங்கிலி வாய் வழியே வந்தது.

இந்த பொம்மையைப் போல தான் சில மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பி விடுகிறார்கள் என்றார் சிற்பி.

பிறகு மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதே போலவே செய்யச் சொன்னார் அரசரிடம்.
மூன்றாவது பொம்மையில் விடப்பட்ட சங்கிலி வெளியே வரவில்லை.
உடனே சிற்பி அரசரிடம், இந்த மூன்றாவது பொம்மையைப் போல் உள்ள மனிதர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் வைத்திருப்பார்கள்.

எப்போதும் எதுவும் அவர்களிடமிருந்து வெளியே வரவே வராது. இதுவே மூன்றாவது பொம்மை நமக்கு விளக்கும் தத்துவம்.
அரசருக்கு சிற்பி என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.

அரசர் உடனே சிற்பியிடம், அப்போது இந்த மூன்று பொம்மைகளில் எது சிறந்தது என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மையே சிறந்தது என்றார்.

அரசர் அந்த பொம்மையில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்டார்.
சிற்பி சொன்னார், அதையும் சோதியுங்கள்.

இப்போது நீங்கள் அந்த நான்காவது பொம்மையின் காதின் வழியாக சங்கிலியை விட்டுப் பாருங்கள் என்றார்.

அரசரும் அப்படியே செய்ய, மறுபக்க காதின் வழியே வெளி வந்தது சங்கிலி.

உடனே அதே சங்கிலியை எடுத்து அதே பொம்மை காதில் மீண்டும் விடச் சொன்னார் சிற்பி.
இரண்டாம் முறை அந்த பொம்மையின் வாயின் வழியே சங்கிலி வந்தது.

அதே போல் மூன்றாம் முறையும் சங்கிலியை அதே பொம்மையின் காதில் விடச் சொன்னார். ஆனால் சங்கிலி இப்போது வெளியே வரவில்லை.

உடனே சிற்பி அரசரிடம், இந்த நான்காவது பொம்மை போன்றவர்கள் நம்பகமானவர்கள்.
அவர்களை நாம் முழுமையாக நம்பலாம்.
நான்காவது பொம்மையைப் போன்றவர்கள் எங்கு பேச வேண்டுமோ அங்கே பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கே கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கே அமைதி காப்பார்கள் என்று விளக்கினார்.

அரசர் சொன்னார், அற்புதமான தத்துவங்கள் சிற்பி.இந்த பொம்மை தத்துவங்கள் அடுத்த பட்டத்து இளவரசருக்கு மட்டுமா தேவை?
எனக்கே பல சமயங்களில் இந்தத் தத்துவங்கள் தேவை.

எனக்கு மட்டுமா தேவை?
இந்த அவையில் உள்ள சான்றோர்கள், மற்றும் இந்த ஊர் மக்கள் ஏன் உலகத்தில் உள்ளவர்களுக்கும் இந்த தத்துவங்கள் பொருந்தும் வகையில் இருக்கிறது என்று பாராட்டி, பல பரிசுகளையும் அள்ளித் தந்தார் அந்த சிற்பிக்கு மகிழ்ச்சியாக.
நீதி: 1)பேசாத வார்த்தைக்கு நாம் எஜமான்.பேசிய வார்த்தை நமக்கு எஜமான்.
2)நமக்கு தெரிந்த பல விஷயங்களை, அலசி ஆராய்ந்து அதனால் மற்றவர்களுக்கு பலன் என்பதை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது எப்போதும் நன்மை பயக்கும்.

🙏 #இந்த_நாள்_இனிய_நாள் ஆக அமைய வாழ்த்துகள் நண்பர்களே🙏
You can follow @ChennaiViswa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: