நான் யார் ?

நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு 'யோக்கியதை ' இருக்கிறதோ இல்லையோ ,
இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறுபற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதியுடையவன் என்றே கருதுகிறேன்.
சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இது போதுமென்றே கருதுகிறேன்.

நான் எப்படி ?

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு , சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன்.
எப்படிப்பட்ட பழைமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.

'புரட்சி' 17-12-1933

நான் சொல்வது கட்டளையா ?

சகோதரர்களே ! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான்.
நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.
' ஒரு பெரியார் உரைத்துவிட்டார் ' என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால் , அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே ! ' நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால் , ' பாவம் ' என்றாவது, ' தோஷம் ' என்றாவது அல்லது ' நரகத்துக்குத்தான் போவீர்கள் '
என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு , ' வேதவாக்கு ' என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.
--
' விடுதலை ' - கட்டுரை - 08-10-1951

என் துணிவு

தோழர்களே!
' நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான் ! அப்படி, இப்படி ! ' என்றெல்லாம் கூறுபவன் அல்லன் ; ஆனால், துணிவு உடையவன் ; கண்டதை ஆராய்ந்து , அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன் . மற்றவர்கள் - சுயநலத்துக்காக , சுயநலத்துடன் பாடுபடுகின்றார்கள்;
அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள்.

நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன் ; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.
நான் ஒரு தொண்டன்

தோழர்களே!

நான் ஒரு பிறவித் தொண்டன் ; தொண்டிலேயேதான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது . தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும் ,
எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமல் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறேனே யொழிய , இதில் எனக்கு மனச் சாந்தியோ , உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும்
அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.

'குடியரசு ' 13-10-1940

#ஈவெரா #பெரியார்இன்றும்என்றும் #HBDPeriyar
You can follow @get2karthik.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: