எம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு நூற்றி எட்டு வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள்.
திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் மேல் கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம் என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார்.

திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் இராமானுஜர்.
"ஆகா, மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே.

ஆழ்வானே, நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராஜப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்".

"அப்படியே செய்கிறேன் சுவாமி"
"ஆழ்வான்.
"அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்"

திருக்கச்சி, வரதன் சன்னிதி - அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.

"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?"
"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?!"
"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும்? ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்".
"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும்.

பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம்.
ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித்தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு இராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்"
"அப்படியே தந்தோம்"
இராமானுஜரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும்.
மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.
"என்ன? உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா?
நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா?
உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான்.
திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது".
இராமானுஜரின் வாக்கின் படி திருக்கோவிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.
"கூரத்தாழ்வான், அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்?".

"தேவரீர் கருணையே போதும் ஸ்வாமி, வேறொன்றும் வேண்டாம்" என்றார் கூரத்தாழ்வான்.
"ஆழ்வான், உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்".

"ஆகா. ஆகா. ஆகா, நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம்.
இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் "வைகுந்தம் உண்டு, வைகுந்தம் உண்டு" என்று
மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார்.
இராமானுஜ சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக் கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை இராமானுஜர் கொண்டாடினார்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏
You can follow @mayamadhava.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: