எல்லை மோதல் விவகாரம் பூமராங்: சீனாவில் புரட்சி வெடிக்கும்?

வாஷிங்டன் : எல்லைப் பிரச்னையில், இந்தியாவை வம்புக்கிழுத்த விவகாரம், 'பூமராங்' போல, சீனாவையே தாக்கியுள்ளது. எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க, சீன அரசு மறுத்து வருவதால்,
ராணுவத்தினரும், முன்னாள் ராணுவத்தினரும் கடும் கோபத்தில் உள்ளனர்.

அதனால், சீனாவில் ராணுவப் புரட்சி ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் கொள்கை கொண்டுள்ள சீனா, இந்தியாவிடமும் வாலாட்ட முனைந்தது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாமிட்டது. இந்தியப் படைகள் துரிதமாக செயல்பட்டு, சீன ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்தது. கடந்த பல வாரங்களாக, இரு நாட்டுப் படைகளும் எல்லையில் முகாமிட்டு உள்ளன.
20 பேர்

இதற்கிடையே, ஜூன், 15ம் தேதி, இரு ராணுவத்துக்கும் இடையே கைகலப்பு மற்றும் மோதல் ஏற்பட்டது. அதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில், 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதை சீனா உறுதி செய்யவில்லை.'சீன வீரர்கள் உயிரிழந்ததாக எந்தத் தகவலும் இல்லை' என, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஜாவோ லிஜியான் முதலில் கூறினார். அதன் பின், 'இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது பொய் செய்தி' என்று கூறினார்.
சம்பவம் நடந்து, 15 நாட்களுக்கு மேலாகியும், சீன தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது, சீன ராணுவ வீரர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது.
கொந்தளிப்பு

அதேபோல், சீன ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்களும், ஓய்வூதியம் உள்ளிட்டவை கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவர்களும், அதிபர் ஷீ ஜிங்பிங் அரசுக்கு எதிராக அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையே, சீனாவுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொபைல் போன், 'ஆப்'களுக்கு தடை, அரசின் திட்டங்களில் பங்கேற்க தடை என, அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பல உலக நாடுகளும், இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
சீனாவின் மூர்க்கத்தனமான நடவடிக்கை, தற்போது பூமராங் போல் அதையே தாக்கி வருகிறது.இந்தியாவை வம்புக்கிழுத்து போர் அளவுக்கு பிரச்னையை கொண்டு சென்றதுடன், தங்களுடைய உயிர் தியாகத்துக்கு மதிப்பு இல்லாதது, சீன ராணுவத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தி

அதனால், சில ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்களுடன் இணைந்து, அரசுக்கு எதிராக, ராணுவப் புரட்சியில் ஈடுபடும் ஆபத்து உள்ளதாக தெரிகிறது.இது குறித்து, அமெரிக்காவில் இருந்து வெளிவரும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரின் மகனும், சீன அரசின் அதிருப்தியாளருமான, ஜியான்லி யாங்க், இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது:எல்லையில் நடந்த மோதலில், உயிரிழந்த வீரர்கள் குறித்த விபரங்களை இந்தியா வெளியிட்டது.
அந்த வீரர்களுக்கு, அரசின் சார்பிலும், மக்களின் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால், சீன அரசு, தகவல்களை மூடி மறைத்துள்ளது. இந்தியாவை விட இரண்டு மடங்கு அதிக வீரர்களை இழந்ததால், அதை தெரிவிக்காமல் சீனா மறைத்துஉள்ளது.
அதிக வீரர்களை இழந்ததுடன், அவர்களுடைய உயிர் தியாகத்தை அரசு மதிக்காதது, சீன ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே அதிருப்தி அலையை ஏற்படுத்திஉள்ளது. தற்போது படையில் உள்ள வீரர்களுக்கே இந்த நிலை. முன்னாள் வீரர்களின் நிலைமை இன்னும் மோசம்.
அரசின் சார்பில் அவர்களுக்கு ஓய்வூதியம் உட்பட எந்த பலனும் அளிக்கப்படுவதில்லை.அந்தந்த மாகாணத்தில் உள்ள அரசுகள் அளிக்கும் திட்டங்கள் மூலம், சிறிய அளவில் பலன் கிடைக்கிறது. அதுவும், ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடுகிறது.
முன்னோட்டம்

அதனால், உரிய உதவிகள் கேட்டு, முன்னாள் வீரர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு எதிரான மனநிலையில், பல லட்சக்கணக்கான முன்னாள் வீர்ரகள் உள்ளனர்.
மேலும், வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து ராணுவத்தை பிரித்து வைக்கும் முடிவை, அரசு எடுத்துள்ளது. இதுவும், நீறு பூத்த நெருப்பாக தகித்துக் கொண்டிருக்கிறது. அதனால், ராணுவ உயரதிகாரிகள் சிலர், முன்னாள் ராணுவத்தினருடன் பேசி வருகின்றனர்.
இவர்கள் இணைந்தால், நாட்டில் மிகப் பெரிய ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
அடுத்து வரும் வாரங்களில், முன்னாள் ராணுவத்தினரின் போராட்டம் தீவிரமாகும். அது நடந்தால், ராணுவப் புரட்சிக்கு முன்னோட்டமாக இருக்கும்.இவ்வாறு கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.
மியான்மரும் களமிறங்கியது

இந்தியாவைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்னை தொடர்பாக, பல நாடுகள், சீனாவுக்கு எதிராக அணி திரண்டு வருகின்றன. இந்த நிலையில், மற்றொரு ஆசிய நாடான மியான்மரும், சீனாவுக்கு எதிராக களமிறங்கிஉள்ளது.
மியான்மர் ராணுவத்தின் தலைமை தளபதி, மின் ஆங் ஹைங்க், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:சீனாவைச் சேர்ந்த, அர்கான் ஆர்மி, அர்கான் ரோஹிங்கா சால்வேஷன் ஆர்மி ஆகிய பயங்கரவாத அமைப்புகள், தொடர்ந்து மியான்மரில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த அமைப்புகளுக்கு, சீன அரசு முழு ஆதரவையும், நிதி உதவியையும் செய்து வருகிறது.கடந்தாண்டு நவம்பரில் இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து, பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும், சீன ராணுவம் பயன்படுத்தக் கூடியவை.
இந்த பயங்கரவாத அமைப்புகளை துாண்டி விடுவதை சீனா நிறுத்த, சர்வதேச நாடுகள் உதவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எல்லையில் அமைதி நிலவ சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

'லடாக் எல்லைப் பகுதியில், மீண்டும் அமைதி நிலவும் வகையில், சீனா செயல்பட வேண்டும்' என, இந்தியா வலியுறுத்திஉள்ளது.டில்லியில், வெளியுறவு செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது;
இரு தரப்பு ஒப்பந்தங்களை மதித்து, லடாக் எல்லை பகுதி
களில் பதற்றத்தை குறைத்து, அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சீனாவிடம், இந்தியா மீண்டும் வலியுறுத்திஉள்ளது. இரு நாடுகளின், ராணுவ கமாண்டர்களுக்கு இடையே நடந்த பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளது.
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு மொபைல் செயலி நிறுவனங்கள், இங்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பிறப்பிக்கும் உத்தரவு களுக்கு கட்டுப்பட வேண்டும்.
இந்திய மீனவர்கள் இருவரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கில், இந்திய அதிகாரிகளின் செயல்பாட்டை, சர்வதேச தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தங்களின் வீரர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என்ற, இத்தாலியின் கோரிக்கையை, தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
You can follow @Raamraaj3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: