அக்ரஹார வீதியில் வெண்மணல் தகித்தது. மனித நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனம் போல் தெரிந்தது வீதி.
‘யாரோ சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. ஊர்ல யாருமே இல்லியே’ என்று எண்ணியவாறு சைக்கிளை மிதித்தேன். பெயர் தான் நவாபு. ஆனால் அலுமினிய பாத்திரங்கள் விற்றுத்தான் சோறு. வாப்பா சொன்னபோதே
படித்திருக்கலாம். தொழில் கற்றுக்கொள்ள வேண்டி பாத்திரக்கடை காதரிடம் வேலைக்குப் போனது எவ்வளவு பெரிய தவறு! இப்போது நினைத்துப் பயனில்லை. வயிறு என்று ஒன்று இருக்கிறது. அதற்குத் தன்மானம் எல்லாம் கிடையாது. சைக்கிளை விட்டு இறங்கி ஒரு மர நிழலில் நின்றேன். ஒரு வாய் தண்ணீர் குடித்தால்
தேவலாம் போல் இருந்தது. அக்கிரஹாரத்தில் யார் தண்ணீர் தரப் போகிறார்கள்? வாப்பா காலத்தில் தெருவில் நடக்கவே விட மாட்டார்கள். இப்போது எவ்வளவோ மேல். வியாபாரம் செய்யும் அளவு முன்னேறி உள்ளது. அப்போது தான் கவனித்தேன். எதிர் வீட்டில் வாசல் திண்ணையில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். 4, 5
சின்னப் பையன்கள் கீழே உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ பாடம் படிப்பது போல் தெரிந்தது. பெரியவருக்கு உடம்பு ரொம்பவும் தள்ளாமையாக இருந்தது. உடம்பு முழுவதும் நாமம் போட்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கைலியை இறக்கிவிட்டேன். பெரியவர் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார். எதற்கு வம்பு என்று
சைக்கிளைக் கிளப்பிக் கொண்டு நடந்தேன். சொல்ல மறந்துவிட்டேன். வீதியில் நுழைந்ததும் டயர் பஞ்சரானது. எனவே தள்ளியபடியே தான் நடக்க வேண்டும். வீதியின் கிழக்குக் கோடிவரை நடந்தேன். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கதவு திறந்தே இருந்தது. ஆனால் வெளியில் யாரும் தென்படவில்லை. ‘பாத்திரம்,
அலுமினிய பாத்திரம், இண்டோலியப் பாத்திரம், பாத்திரம்..’ என்று கூவிப் பார்தேன். ஒரே ஒரு வீட்டு உள்ளிருந்து ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆண் எட்டிப் பார்த்தார். அப்போதுதான் அது உறைத்தது. அடச்சீ தப்பு செஞ்சுட்டோமே.. அக்ரஹாரத்துலே அலுமினியப் பாத்திரம் யாரும் வாங்க மாட்டாங்களே! இதுக்குப்
போயா இங்கே வந்தோம் இந்த வெய்யில்லே. வந்த வழியே நடந்து சென்றேன். வெயில், தண்ணீர் இல்லை, பாத்திரம் விற்கவில்லை, மெள்ள தெருமுனைக்கு வந்துவிட்டேன். ‘யோவ் பாத்திரம், பாத்திரம்..’ என்று கத்திக் கொண்டே ஒரு பிராமணப்பையன் அந்தப் பெரியவர் இருந்த வீட்டில் இருந்து ஓடி வந்தான். ‘உடனே வாப்பா..
பெரியவர் கூப்பிடுறார்’, என்றான். பெரியவருக்கு அவன் என்னவோ பெயர் சொன்னான். எனக்குப் புரியவில்லை. என்ன தப்புப் பண்ணினேன் என்று நினைத்துப் பார்த்தேன். கைலியைக் கூட இறக்கித் தானே விட்டிருந்தேன். வந்தது வரட்டும்னு வண்டியைத் தள்ளிக் கொண்டு பெரியவர் இருந்த வீட்டு வாசலுக்குப் போனேன்.
அப்போது தான் பார்த்தேன். பெரியவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். ஒரு பீடம் மாதிரி இருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்தார். மார்பு, வயிறு, கை, நெற்றி என்று நாமம் போட்டிருந்தார். நெற்றி நாமம் மட்டும் சற்று தடிமனாக இருந்தது. வீட்டுக்கு உள்ளே இன்னும் பலர் இருந்தாங்க. வேட்டி மட்டும்
கட்டி இருந்தாங்க. நாமம் போட்டிருந்தாங்க.
பெரியவர் என்னை உட்காரச் சொன்னார். ஒரு ஓரமா உட்கார்ந்தேன்.
அதுக்குள்ளே ஒரு ஐயரு வந்து,’ கொஞ்சம் தள்ளி உக்காருப்பா..’, என்று அதட்டினார். என்னைப் பெரியவர் உட்காரச் சொன்னது அந்த ஐயருக்குப் பிடிக்கவில்லை போல. பெரியவர் அந்த ஐயரை கோவமா ஒரு
பார்வை பார்த்தார். பெரியவர் மட்டும் காவி கலர்ல துண்டு கட்டி இருந்தாரு. கையிலே மூணு கழிங்கள ஒண்ணாக் கட்டி, அது உச்சில ஒரு துணில கொடி போல இருந்துச்சு. அந்தக் கழிங்கள கையில வெச்சிருந்தாரு.
‘தமிழ் தெரியுமான்னு ஒரு கம்பீரமான குரல் கேட்டுச்சு. தலை நிமிர்ந்து பார்தேன். பெரியவர் தான்
பேசியிருந்தார். தெரியும்னு தலை ஆட்டினேன். என்னமோ அவர்கிட்டே பேசுறதே கொஞ்சம் பயமா இருந்துச்சு.
அவரு முள்ளு மாதிரி தாடி வெச்சிருந்தார். தலைலேயும் வெள்ளை முடி. அசப்புல சிங்கம் மாதிரி இருந்துச்சு. ‘எந்த ஊர் உனக்கு?’ ‘பக்கத்துலே வேலூர் பக்கம் சாமி’ ‘சாப்டாச்சா?’ ‘ஆச்சுங்க சாமி.
கருக்கல்ல கஞ்சி குடிச்சேங்க’. பெரியவருக்குப் புரியவில்லை. அருகில் இருந்த நாமம் போட்ட இன்னொரு ஐயரு,’ அவன் கார்தாலே கஞ்சி சாப்டானாம் அடியேன்..’, என்று சொன்னார். பெரியவர் உள்ளே பார்த்து, ’ததீயாராதனம் ஆயிடுத்தா?’, என்று கேட்டார். இன்னொரு ஐயர் உள்ளே இருந்து ஓடி வந்து ஏதோ சொன்னார்.
பெரியவர் கேட்க அந்த ஐயர் ஏதோ சொன்னார். பாஷை புரியவில்லை. இரண்டு நிமிஷம் நிசப்தம். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தேன். மேலே அண்ணாந்து பார்த்தேன். இடி இடிப்பது போல் பெரியவர் உள்ளே இருந்து வந்த ஐயரிடம் ஏதோ உத்தரவு போட்டார். அந்த ஐயர் உடனே கீழே விழுந்து வணங்கி உள்ளே
சென்றார். ‘எத்தனை பிள்ளை குட்டி உனக்கு?’, பெரியவர் என்னிடம் கேட்டார். ‘மூன்று பெண்கள் சாமி’, என்றேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது. ‘வீடு வாசல் இருக்கா?’ ‘அப்பா வைத்த வீடு ஒண்ணு இருக்கு சாமி, பாத்திரம் வியாபாரம் தான் தொழில்’, என்றேன். என்னவோ அந்தப் பெரியவர் பிடித்துப் போய் விட்டார்.
இந்தக் கேள்விகளை யாரும் என்னிடம் கேட்டதில்லை. ஏதோ ஒரு அக்கறையுடன் கேட்பது போல் தோன்றியது. ‘பொண்கள் படிக்கறாளா?’, என்றார். ‘ஆமாங்கையா, ஸ்கோலு போவுறாங்க’, என்றேன். வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக என் பயம் குறையத் தொடங்கியது. என் குரல்
சற்று வெளியே வருவது போல் உணர்ந்தேன். மற்ற ஐயர்கள் எல்லாரும் பெரியவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே மரியாதையுடன் இருப்பது போல் பட்டது. ‘இங்கே சாதம் போட்டா சாப்பிடறியா?’ அவர் அது தான் கேட்டாரா அல்லது பசி மயக்கத்தில் அப்படிக் காதில் விழுந்ததா தெரியவில்லை. குழப்பத்துடன் அவரையே
பார்த்தேன். ‘சோறு போட்டா சாப்புடுவியான்னு கேக்குறாரு..’, என்றார் இன்னொரு ஐயர். அவர் குரலில் சற்று எரிச்சல் தெரிந்தது. ‘சாப்புடுறேன் சாமி’; என்றேன் நன்றியுடன். ஏனோ எனக்கு நெஞ்சை அடைத்தது. பக்கத்தில் ஒரு கொட்டகையில் சோறு போட்டார்கள். இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிட்டேன். உப்பு, காரம்
எதுவுமில்லை. சாப்பிட்டு முடித்ததும் பெரியவர் கூப்பிடுவதாகச் சொன்னார்கள். ‘சாப்டாச்சா?’ என்றார் புன்முறுவலுடன் தலையை ஆட்டினேன். ‘நன்னா இருந்துதா?’, என்று சிரித்தபடியே கேட்டர் பெரியவர். பதில் சொல்லாமல் மையமாக நின்றேன். ‘பாத்திரம் எல்லாம் வித்துடுமா?’, என்று மறுபடியும் அவரே கேட்டார்
காலைலேர்ந்து ஒண்ணும் விக்கலீங்கையா. இங்கே ஐயமாரு இடம்னு தெரியாம வந்துட்டேன். அலுமினியம் வாங்க மாட்டாங்க. இனிமே வேற ஊர் தான் போகணும்’, என்றேன். ‘மொத்தமா என்ன விலை?’, என்றார். புரியாமல் நின்றேன். ‘எல்லாப் பாத்திரமும் வித்தா என்ன விலை கிடைக்கும்?’, என்று வேறொருவர் கேட்டார்.
‘100 ரூபா பெயரும் சாமி. அதுக்கு 2, 3 நாள் ஆகும்’, என்றேன் புரியாமல். பெரியவர் அதிகாரி போல் இருந்த ஒருவரைப் பார்த்தார். அவர் உடனே 120 ரூபாய் எடுத்துக் கொடுத்து ’எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கறோம்’, என்றார். ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ மடம் போல் தெரிகிறது. ஐயமார் மடம். அலுமினியம்
வாங்கறாங்களே. நம்பவும் முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பெரியவர் பேசினார். ‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். இந்த பாத்திரங்களை எல்லாம் கொண்டு போய் வடக்கு வீதிக்குப் பின்னாடி குடியானவத் தெரு இருக்கு.
அங்க ஆத்துக்கு ஒரு பாத்திரம்னு குடுக்கணும். குடுக்கறயா ?’, என்று
சொல்லி என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
இறைவன் கருணை வடிவானவன் என்று வாப்பா அடிக்கடி சொல்வார்.

அஹோபில மடம் 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் முக்கூரில் தங்கியிருந்த போது நடந்த சம்பவம். இவர் தான் திருவரங்கம் ராஜகோபுரத்தை ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார்.
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: