என்னுடன் பணிபுரியும் பிலிப்பினோ நண்பருடன் ஒரு அலுவலகப்பணிக்கு சென்று இருந்தேன். மதிய உணவிற்கு இருவரும் அங்கிருக்கும் உணவகத்தில் சாப்பிட சென்றோம். அவர் மீனும் சோறும் கொண்ட ஒரு வெஜ் சாப்பாட்டை வாங்க (இங்க எல்லாம் மீன் வெஜ் தான்).. நான் "Black Pepper Chicken with Spaghetti" என்ற
வெஸ்டர்ன் உணவை வாங்கினேன். நான் சாப்பிட ஆரம்பிக்கும் முன் என் தட்டை பார்த்து, பரவாயில்லையே நீ எல்லா உணவையும் சாப்பிடுகிறாயே என்றார்.

ஆமாம், நான் எல்லா உணவையும் சாப்பிடுவேன் என்றேன். அதன் பிறகு எங்களுக்குள் நடந்த விவாதம் இப்படிச்சென்றது.
அவர்: ஏன் நம் அலுவலகத்தில் சிலர் வெஜ் மட்டும் சாப்பிடுகிறார்கள். நீ எல்லாமே சாப்பிடுகிறாய். நீ இந்து இல்லையா?

நான்: நான் இந்து தான். இந்துக்களிலேயே பல பிரிவுகள் இருக்கிறது. வெஜ் மட்டும் சாப்பிடுபவர்கள். நான் வெஜ்ஜில் மாட்டுக்கறி சாப்பிடாத இந்துக்கள், மாட்டுக்கறி சாப்பிடும்
இந்துக்கள் என மூன்று பிரிவுகள் இருக்கிறார்கள்.

அவர்: நீ அதில் எந்த பிரிவு?

நான்: இரண்டாம் பிரிவில் இருந்தேன்.. இப்போது மூன்றாம் பிரிவுக்கு மாறிவிட்டேன்.

அவர்: ஏன் உங்கள் மதமே.. இதனை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறதா?

நான்: ஆம். மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்ட
சாதியினர் என்று சொல்லியது. அவர்களை ஒதுக்கி வைத்தது. எல்லா ஊரிலும் ஏழை பணக்காரன் என்ற வர்கம் தான் இருக்கும். எங்கள் ஊரில் சாதி தான் ஒருவனை ஏழையாகவும் பணக்காரனாகவும் ஆக்கி வைத்து இருக்கிறது.

அவர்: நீ எந்த சாதி?

நான்: சாதி அடுக்கில் நான் நான்காம் இடம். ஒவ்வொரு அடுக்கிலும்
பல்வேறு சாதிகள் இருக்கிறது.

அவர்: ஏன் உன்னால் சாதி மாறமுடியாதா?

நான்: இல்லை. மாற முடியாது. மதம் மாறினால் கூட எங்கள் ஊரில் சாதி மாறாது. எங்கள் ஊரில் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் சாதி உண்டு.

அவர்: ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவர் ஒரு சாதியில் பிறந்ததற்கு
கடைசி வரை ஏழையாக தான் இருக்கவேண்டுமா?

நான்: ஆமாம். அப்படி தான் இருந்தது. ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு வேலை தான் செய்யவேண்டும். கீழ் அடுக்கில் இருப்பவர்கள் ஏவல் வேலைகளை செய்யவேண்டும், அதற்கு மேலே இருப்பவர்கள் வியாபார வேலைகளை செய்யவேண்டும், அதற்கு மேலே இருப்பவர்கள் அரசியல்
செய்யவேண்டும், அதற்கும் மேலே இருப்பவர்கள் படிக்க வேண்டும். இந்த நான்கில் சேராத சாதியினரை "தீண்டத்தகாதவர்கள்" என்று பிரித்தது.

அவர்: ஒரு பிரமிட் போன்ற அமைப்பு மாதிரி இருக்கிறது.

நான்: Exactly (சாதிய படிநிலை புகைப்படத்தை அவரிடம் எடுத்து காட்டுகிறேன். See the last comment)
இந்த பிரிவுகளால் மக்கள் பல காலம் படிக்காமலும், விரும்பிய வேலைக்கு போகமுடியாமல் இருந்தார்கள்.. சுதந்திரம் அடைந்தபின் தான் "Reservation System" என்ற ஒரு விஷயத்தை அரசியலமைப்பு சட்டம் மூலம் உருவாக்கி அனைவரும் படிக்க ஆரம்பித்தனர்.

அவர்: "Quota" போன்றா?

நான்: ஆமாம், ஒவ்வொரு
பிரிவுக்கும் இத்தனை இடங்கள் என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள். இதன் மூலம் இப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வருகிறார்கள்.

அவர்: தீண்டத்தகாதவர்கள் என்று சொன்னாயே? அப்படி என்றால் என்ன?

நான்: அவர்கள் பொதுவான தெருவில் நடக்கக்கூடாது. சரியான துணியை உடுத்தக்கூடாது. எச்சிலை
வீதியில் துப்ப கூடாது. தெருவுக்குள் வருவதென்றால் ஓ வென கத்திக்கொண்டே வரவேண்டும். ஏனென்றால் அவர்களை யாரும் பார்த்துவிடக்கூடாது. ஒரு டீக்கடையில் கூட தீண்டத்தகாதவர்களுக்கு ஒரு கோப்பை மற்றவர்களுக்கு ஒரு கோப்பை என இருக்கும்.

அவர்: என்ன கொடுமை இது? இன்னுமுமா இது நடக்கிறது?
நான்: கடுமையான சட்டங்களால் குறைந்து இருக்கிறது. ஆனால், முற்றிலும் போய்விட்டது என்று சொல்ல முடியாது.

அவர்: இதையெல்லாம் மாற்ற முடியாதா?

நான்: மாற்றமுடியாது. இதையெல்லாம் உருவாக்கியது கடவுள் தான் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் தான் எனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.
அவர்: ஓ.. அப்படியா?

நான்: இதில் வேடிக்கை தெரியுமா? ஒரே அடுக்கில் இருக்கும் பல சாதிகளும் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். நான் உன்னுடன் பெரியவன் என்று..உங்கள் ஊரில் திருமணம் எப்படி நடக்கும்? ஆண் பெண் பார்த்து பழகி தானே? எங்கள் ஊரில் அப்படி நடக்காது. அப்படி ஒரு வேளை நடந்து சாதி
விட்டு சாதி திருமணம் செய்தால் கொலை கூட செய்துவிடுவார்கள்.

அவர்: ஐயோ, அதனால் தான் உங்கள் ஊரில் "Arranged Marriage" என்று ஒன்று நடக்கிறதா?

நான்: ஆமாம். சாதியை காப்பாற்றத்தான் அது நடக்கிறது.

அவர்: இதில் பெண்களின் நிலை என்ன?

நான்: மோசம் தான். அவர்கள் தான் இதில் அதிகம்
பாதிக்கப்படுபவர்கள்.

அவர்: அவர்கள் இதை எப்படி பார்க்கிறார்கள்?

நான்: அவர்களால் பெரிதாக இதை எதிர்க்க முடிவதில்லை. உங்கள் ஊரில் திருமணம் நடந்தால் என்ன செய்வீர்கள்? மோதிரம் மாற்றிக்கொள்வீர்கள் தானே?

அவர்: ஆமாம். நீயும் தான் அணிந்து இருக்கிறாயே.

நான்: ஆமாம். இது நிச்சய மோதிரம்.
ஆனால், என் மனைவி மட்டும் ஒரு அணிகலன் அணிந்து இருப்பார். அதன் பேர் தாலி.

அவர்: ஓ, அது அவருக்கு மட்டுமா? தங்கத்தால் ஆனதா?

நான்: ஆம் தங்கத்தால் ஆனது தான்.

அவர்: ஓ, அதை நீ வாங்கித்தரவேண்டுமா? அல்லது மனைவி வீட்டில் வாங்கி தரவேண்டுமா?

நான்: அது சாதிக்கு சாதி மாறும்.
சில சாதிகளில் ஆண் வீட்டில் வாங்குவார்கள். சில சாதிகளில் பெண் வீட்டில் வாங்குவார்கள். ஆனால், பெண் வீட்டில் இருந்து தான் நிறைய நகை வாங்கி தரவேண்டும்.

அவர்: ஆம், இதை கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்படி வாங்கினால் ஆண் வேலையே செய்யவேண்டாம் இல்லியா?

நான்: ஹா ஹா.. ஆமாம்.
சில சாதிகளில் இந்த வரதட்சணை மிக அதிகமாக தருவார்கள். பெண்ணை சாதியை விட்டு சாதி திருமணம் செய்துக் கொடுக்காததற்கு பின்னால் சொத்தும் ஒரு காரணமாக இருக்கிறது. இரு பணக்கார குடும்பங்களுக்கு இடையே சாதி பெரிதாக இருக்காது. அங்கே பணம் மட்டும் தான் பேசும்.

அவர்: உங்கள் வரலாறு மிக
வித்தியாசமாக இருக்கிறது.

நான்: உங்கள் ஊர்களில் கணவன் இறந்தால் என்ன ஆகும்?

அவர்: கணவனின் சொத்து மனைவிக்கு வரும்.

நான்: ஹா ஹா, நான் அதை கேட்கவில்லை. கணவன் இறந்தால் மனைவி என்ன செய்வார்?

அவர்: இன்னொரு திருமணம் செய்துக்கொள்வார்.

நான்: எங்கள் ஊரில், கணவன் இறந்தால்,
அவனை எரிக்கும் போது மனைவியையும் சேர்த்து எரித்துவிடுவார்கள்.

அவர்: என்ன கொடுமை இது?

நான்: ஆமாம், இந்த கொடுமைகள் எல்லாம் நடந்தது. இதற்கு பின்னாலும் சாதி தான் இருக்கிறது. இப்போது இந்த பழக்கத்தை முழுவதும் ஒழித்துவிட்டார்கள்.

அவர்: எல்லாம் சரி. ஒருவனை பார்த்ததும் இவன் இந்த சாதி
என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? கண்டுபிடித்தால் தானே தீண்டாமை எல்லாம் செய்யமுடியும்?

நான்: ஆமாம். பெயரை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்கள்.

அவர்: ஓ, உங்கள் பெயரிலேயே சாதி இருக்கிறதா?

நான்: என் பெயரில் இல்லை. எங்கள் ஊரில் சில பெரியார்கள் பிறந்ததால் நாங்கள் சாதிப்பெயரை
போடுவதில்லை. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களில் சாதியை போட்டுக்கொள்வார்கள்.

அவர்: அருமை. இப்போது தான் நம் அலுவலகத்தில் மற்ற இந்தியர்கள் உன்னைப்பார்த்து ஏன் "வேறு நாடு" என்று சொல்கிறார்கள் என்று புரிகிறது!

நான்: ஹா ஹா ஹா.. உண்மை தான். நாங்கள் மற்ற மாநிலங்களை விட
கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அவர்கள் எங்களை தனிநாடு என்று கூறுவதற்கு இன்னொரு காரணம், நாங்கள் "இந்தி" மொழியை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற ஊர்கள் எல்லாமே அந்த மொழியை ஏற்றுக்கொண்டது. அவர்களால் எளிதாக நுழைய முடிந்தது. எங்கள் ஊருக்கு அவர்கள் வந்தால், அவர்கள் வேறு நாடாக உணர்வதற்கு இதுவும்
ஒரு காரணம்.

அவர்: ஓ, உனக்கு இந்தி தெரியாதா?

நான்: இல்லை. தெரியாது. எங்கள் ஊருக்கு எங்கள் தாய்மொழியும், ஆங்கிலமும் போதும் என்று எங்கள் ஆட்சியாளர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் நாங்கள் முன்னேறி இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் இருந்து எங்கள் மாநிலத்துக்கு வேலைக்கு வருகிறார்கள்.
அவர்: சுவாரசியமான வரலாறு உங்களுடையது.

- ராஜராஜன் ஆர்.ஜெ
You can follow @RajarajanRj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: