வெயில் அதன் உச்சியை அடைந்திருந்தது .சனிக்கிழமை அரைநாளே பள்ளி , கதிர் நடந்து வந்து கொண்டிருந்தான் . "ஏலேய் ஏம்ல ஓடுத, நில்லுன்னு சொல்லுதம்ல " என்றான் ராஜா ."டாஸ் போட்ருவாங்கடா சீக்கிரம் வா " என்ற கதிர், வெயிலை குடித்தே வளர்ந்திருந்தால் வெயிலை பொருட்படுத்தாமல் நடந்துகொண்டிருந்தான்.
அவனது கோவில்பட்டியில் கிட்டத்தட்ட எல்லோருமே வெயிலை குடித்தே வளர்ந்திருப்பர். "ஏய் இன்னைக்கு சன் டீவில விஜய் படம் போடுதான் தெரியும்ல " என்றான் ராஜா . "எது அந்த பிளாப் படம் நெஞ்சினிலே தான . அத விட இன்னைக்கு மாட்ச் முக்கியம் கேட்டியா ".
காலைல இருந்து மீண்டும் மீண்டும் ஒரே பிராத்தனை தான் மனசிலே ,"ஆண்டவா எப்படியாச்சும் இன்னைக்கு இந்தியா ஜெயிக்கணும் .அந்த flintoff ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சட்டையை கழட்டிட்டு சுத்துன மாதிரி நான் சுத்தணும்.
அப்ப ஹோம்ஒர்க் பண்ணலயா இன்னைக்கு " என்ற ராஜாவிடம் ,"இல்ல எப்படியும் திங்கக்கிழமை காமராஜர் பிறந்த நாள் விழா தான அதனால யாரும் ஹோம்ஒர்க் செக் பண்ண மாட்டாங்க" என்றான் .கதிர் வாழ்வில் எல்லா கனவுகளும் லட்சியங்களும் இந்தியா கிரிக்கெட் வெல்வது குறித்தே இருந்தது .
325 ரன்கள் இங்கிலாந்து அடித்த போது , அவனது மனதில் பயம் இருந்தது .இருப்பினும் அவனுக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை உண்டு.அவனது வாழ்வில் அதிசயங்கள் மீது நம்பிக்கை வந்தது,டிராவிட் லட்சுமண் ஒரு நாள் முழுக்க ஆட்டமிழக்காமல் இருக்க , இந்தியா ஈடன் கார்டெனில் ஆஸ்திரேலியாவை வென்ற போதுதான்.
பின்பு 145/4 என்றான போது அம்மா அவ்வளவு சொல்லியும் கேக்காமல் சாப்பிடாமல் படுத்தான். வேறோரு சேனலை மாத்தி அவனது அம்மா 'நெஞ்சினிலே' படத்தை பார்க்க ஆரம்பித்தார் . அவனுக்கு தூக்கமும் வரவில்லை ,"அம்மா ஒரு நிமிஷம் " என்று சொல்லிக்கொண்டே கிரிக்கெட்க்கு மாத்தினான் .
வேறு விக்கெட் எதுவும் விழாமல் 200க்கு மேல் எடுத்து ஆடி கொண்டிருந்தனர் . அவனது அம்மா ,"பாத்தியா, நீ பாக்காம இருந்ததுனால தான் நல்ல விளையாடறாங்க " என்றாள்.அவனும் பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் விட்டு விட்டு பார்த்து கொண்டிருந்தான் .
அவன் வாழ்க்கையில் ரெண்டாவது முறையாக அதிசயம் நடந்தது .

"when going gets tough , tough starts get going " என்பதற்கு ஏற்ப யுவராஜும் முகமது கைபும் வெற்றி பெற வைத்தனர் . தனது சட்டையை கழட்ட எண்ணிய போது அவனுக்கு முன்பாக கங்குலி சட்டையை கழட்டி சுற்றி கொண்டிருந்தார் .
மனம் முழுவதும் களங்கமற்ற மகிழ்ச்சி .வாழ்வில் சில நொடிகள் மட்டுமே கூடும் unadulterated joy என்பதை முழுமையாக உணர்ந்தான் அன்று.

மீண்டும் பல சனிக்கிழமைகள்,சோயிப் அக்ஹதரை சச்சின் ஜோஹன்ஸ்பேர்க்கில் சிதறடித்ததும் ஒரு சனிக்கிழமை தான்.நெஹ்ரா கடைசி ஓவரை 10 ரன்கள் கொடுக்காமல் காப்பாற்றியது
மெதுவாக விளையாடுவதாக அறியப்பட்ட டிராவிட் மிக வேகமாக விளையாண்டு 50 ரன்கள் அடித்ததும் ஒரு சனிக்கிழமை தான்.

சில வருடங்கள் கடந்தன .கதிர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தான் .இப்போது மீண்டும் ஒரு சனிக்கிழமை ஆனால் பல வருடங்கள் கனவு கண்ட தருணங்கள், கண் முன்னே நடந்து கொண்டிருந்தன .
இந்தியா உலக கோப்பை இறுதிக்கு தகுதி பெற்றது . எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதன் , அவனுக்காக கோப்பையை பெற்று தர பல பிராத்தனைகள் . விடுதியில் மிக பெரிய ஒளிவீச்சியில் கிரிக்கெட் காட்டினர் .
இலங்கை பேட்டிங் செய்ய ஆரம்பித்தது . போன முறை இறுதியில் பதறிய ஜாஹிர் கான் இந்த முறை ,"முடிஞ்சா தொட்ரா பாப்போம் " என்கிற ரீதியில் பந்து வீசினார். எல்லா பந்தும் சரியான வகையில் பிட்ச் ஆகின.
முந்தைய போட்டியில் முக்கியமான விக்கெட்டை (உமர் அக்மல்) முக்கியமான நேரத்தில் எடுத்த ஹர்பஜன் இந்த போட்டியிலும் நன்றாகவே வீசினார் . இருப்பினும் ஜெயவர்த்தனே தனது அனுபவத்தை பயன்படுத்தி சதம் அடித்தார் . பெரேரா கடைசி பந்தை சிக்ஸர் விளாசினார். இப்போது உந்தப்பெருக்கு இலங்கைக்கு இருந்தது .
கதிர் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் தனது நண்பனிடம் , " டேய் ,சேவாக் முதல்ல கொஞ்சம் பார்த்து விளையாடனும் டா " என்றான் . இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ,இந்தியா விளையாட வந்து முதல் விக்கெட்டை இழந்தது .
கோபப்பட்ட கதிரிடம் அவனது நண்பன் ,"டேய் பாத்து பாத்து விளையாண்டா அது சேவாக்கே இல்லடா " என்றான் . எல்லாருமே வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியை கவனித்து கொண்டிருக்கும் போதே சச்சின் அவுட்.
கதிருக்கு அழுகை வந்தது ,எல்லாரும் பக்கத்தில் இருந்ததால் முகத்தை மூடி கொண்டிருந்தான்.இப்போது ஆட்டத்தின் முக்கியமான பகுதி. ஒரு விக்கெட் கொடுத்தாலும் ஆட்டம் முடிந்தது .அப்போது கோஹ்லி இறங்கினார். சச்சின் போகும் போது ஒரு 10 வினாடி கோஹ்லியிடம் ஏதோ சொல்லி விட்டு போனார் .
கதிருக்கு ஆடுகளம் படத்தின் காட்சி நினைவுக்கு வந்தது தனுஷ் தனது சேவலிடம் கூறுவார் ,"டேய் தம்பி !! நீயும் செத்துருவ, நானும் செத்துருவேன். ஆனா வரப் போற 15 நிமிஷம் எத்தனை வருஷம் ஆனாலும் அப்டியே இருக்குண்டா . என்ன வேண்ணாலும் பண்ணு, மேட்ச்ச மட்டும் கொடுத்துறாத ".
அது கிட்டத்தட்ட ஒரு passing of baton . 20 வருடங்களாக வைத்திருந்த சுமையை சச்சின் இறக்கி விட்டார் .

கம்பிர் நல்ல மனநிலையில் உள்ள போதெல்லாம் அவரது கண்ணில் கூடுதல் கூர்மை ஏற்படும் . அன்றும் அவ்வாறே இருந்தது .
கதிர் தனது வழக்கமான உத்தியை பயன்படுத்த முடிவு செய்தான் . மேட்ச் பார்ப்பதை விட்டு விட்டு தனது ரூமில் போய் உட்கார்ந்திருந்தான் . அவ்வப்போது வந்து ஸ்கோர் பார்த்து விட்டு சென்று விட்டான் .

அன்று தோனி ஒரு கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக "An abnormal reaction to an abnormal situation is normal behavior." என்பதற்கு ஏற்ப தனது கேன்சரை மறைத்து கொண்டு கோப்பையை எப்படியேனும் பெற்று தர எண்ணி விளையாடினார் யுவராஜ் .
இந்தியா கண்டிப்பாக வெற்றி பெறும் என்று முடிவான பின்பு கதிர் ஆட்டத்தை பார்க்க வந்தான் . தோனி சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் .
கதிர் அந்த நொடி உலகம் அப்படியே நின்று விட வேண்டும் என்று நினைத்தான் . அவனுக்கு மீசை முளைத்த நியாபகம் இல்லாமல் மீண்டும் அந்த 12 வயது சிறுவன் ஆனான் .அவனது கண்ணில் கண்ணீர் வந்தது .

எப்போதும் இயல்பாக இருக்கும் சேவாக், அதிகமாக. உணர்ச்சிவசப்படும் யுவராஜ், ஹர்பஜன் என எல்லோரும் அழுதனர்
கிரிக்கெட்டை உணர்வுபூர்வமாக அணுகிய கடைசி தலைமுறை அதுவே.

உலகில் சில விஷயங்கள் மட்டும்தான் கால சக்கரத்தை பின்புறமாக சுற்றுகின்றன.அவற்றில் நிச்சயமாக கிரிக்கெட்டும் ஒன்று.
You can follow @hunmid12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: